மேஷம்

மேஷ ராசி நாதன் செவ்வாய் இம்மாதம் 6-ல் (கன்னியில்) சஞ்சாரம். 6-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும் செவ்வாய்க்கு 3, 6, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள் என்று ஜோதிடவிதி, 6 என்பது ரோகம், ருணம், சத்ரு என்பது நீங்கள் அறிந்ததே! அந்தவகையில் நோய் நிவர்த்திக்கு இடமுண்டு. சத்ருக்கள் யார் என்பதையும் காட்டிக்கொடுத்துவிடும். இதில் எதிரி என்பதைவிட துரோகிகள் யார் என்பதை அறிந்து கொள்ளமுடியும்; புரிந்துகொள்ளமுடியும். 11-ஆமிடத்து சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஜெயத்தைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். நீண்டகாலமாக உண்மையாக உழைத்தும் அதற்குப் பலனில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வக்ரசனியும், 11-ஆமிடத்து ராகுவும் அந்த கவலைக்கு நிவாரணமும், காயத்திற்கு மருந்தும் தருமாறு பலன்களைச் செய்வார்கள். 5-ஆமிடத்துக் கேது பிள்ளைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளைத் தந்தாலும் 3-ஆமிடத்து குரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் நற்பலன்களே ஏற்படும். 2-க்குடையவரும் 12-க்குடையவரும் 3-ல் இருப்பதால் பொருளாதாரத்தில் வரவு வந்தாலும் செலவுகள் சற்று அதிகமாகக் காணப்படும். மாத பிற்பாதியில் தேவைகள் நிறைவேறும். பொள்ளாச்சி ஆனைமலை மாசானி அம்மனை வழிபடவும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் குருவுடன் இணைந்து சஞ்சாரம். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் தடை, தாமதம் விலகும். காரிய அனுகூலமும் உண்டாகும். 3-ல் உள்ள புதன் சகோதர- சகோதரிவகையில் சில நன்மைகளைத் தருவார். தாய்மாமன் சம்பந்தப்பட்ட வகையிலும் நிலவிய கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளியும் அமையும். பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தைகளும் சுமூகமான தீர்வுகளுடன் முடியும். குடும்பத்திலும் நீண்டநாட்களாக நிலவிவந்த குழப்பங்கள் தீரும். குறிப்பாக திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்குத் தடைப்பட்டுவந்த சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமான பதிலைத் தரும். எத்தனையோ பெண் பார்த்தும் அல்லது பையன் பார்த்தும் சுமூக தீர்வுகள் வராமல் இழுபறியாக நிலைமாறி மனக்கவலைக்கு மருந்ததாகவும் தகவல்கள் வரும். 10-ல் சனி வக்ரமாக இருப்பதால் உத்தியோக துறை அல்லது தொழில் துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். பதவி உயர்வு, வேலையில் இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவை ஏற்படலாம். தாயார் மற்றும் தகப்பனாருக்கு தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமுதாயத்திலும் உயர்ந்த மனிதர்களின் பழக்கம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபட உத்தமம்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 2-ஆமிடமான கடகத்தில் சஞ்சாரம். அவர் 4-க்கும் உடையவர். ஜனன ஜாதகத்தில் 12-க்குடைய தசாபுக்தி நடந்துகொண்டிருந்தால் குடியிருப்பு வகையில் இடமாற்றம், உத்தியோகத்திலும் இடமாற்றம் அல்லது கூடுதல் சுமை போன்றவற்றை சந்திக்கலாம். கடந்த மாதம் ஏற்பட்ட வைத்தியச் செலவுகள் இம்மாதம் குறையும். தேகநலத்தில் ஆரோக்கியம் உண்டாகும். தனவரவும் சற்று திருப்திகரமாக அமையும். பாக்கிய ஸ்தானத்திலுள்ள சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தகப்பனார்வழியில் செலவினங் கள் ஏற்படலாம். அதாவது பூர்வீக சொத்து சம்பந்தமான சீர்திருத்தம் அல்லது பூர்வீக வீட்டை பழுது பார்ப்பது போன்ற செயல்பாடுகள் உண்டாகும். 12-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தொடக்கத் தில் ராகு சாரத்திலும் பிறகு குரு, சனி சாரத்திலும் சஞ்சாரம். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி முடிக்க முடியாதபடி தாமதம் ஏற்படலாம். என்றாலும் வக்ரசனி 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் காரிய வெற்றி என்பதும் உண்டாகும். "எண்ணியர் எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்'' என்ற குறளுக்கேற்ப உங்களது விடாமுயற்சியும் திடமான மனதும் உங்களுக்கு ஜெயத்தைத் தரும். பொறுமையும் அவசியம். புதன்கிழமை சக்கரத்தாழ்வார் வழிபாடு நன்மை.

Advertisment

கடகம்

கடக ராசிக்கு 12-ல் குரு சஞ்சாரம். அட்டமத்துச் சனியும் நடக்கிறது. 8-ல் உள்ள சனி வக்ரம். எனவே மனச்சஞ்சலம், மனக்கவலை, வீண்விரயம் போன்றவற்றை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலை! குடியிருப்புவகையில் இடமாற்றம் ஏற்படும். 11-க்குடைய சுக்கிரன் 12-ல் சஞ்சாரம். எனவே விரயத்தைக் கட்டுப்படுத்த இயலாது. "கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே'' என்று ஒரு படத்தில் டணால் தங்கவேலு பாடுவதுபோல வரவு வருவதுமாதிரி தெரிந்தாலும் மிச்சப்படுத்த முடியாதபடி செலவுகள் ஏற்படும். 8-ல் சனி ஆட்சி, வக்ரம் என்றாலும் 8-ஆமிடத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டத்திற்கும் இடமுண்டு. 10-க்குடைய செவ்வாய் 3-ல் மறைவு. உடன்பிறந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு அதனால் வைத்தியச்செலவு ஏற்படுதல் அல்லது உடன்பிறந்தவர்களோடு மனவருத்தம் சங்கடம் போன்ற நிகழ்வுகள் உண்டாகும். 9-க்குடைய குரு 12-ல் மறைவதால் பூர்வ புண்ணியவகையில் உங்களுக்கு சேரவேண்டிய பங்குபாகப் பிரிவினையில் இழுபறி நிலை ஏற்படலாம். தொழில் மாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வேலையை அணுகுவோருக்கு பலன் தரும். திடீர் பயணமும் உண்டாகும். திங்கட்கிழமைதோறும் சிவ-ங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்யவும். 

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை விரயஸ்தானத்தில் சஞ்சாரம். எனவே விரயங்கள் சற்று அதிகமாகத்தான் காணப்படும். குரு 11-ல் இருப்பதால் ஏற்றமும்- இறக்கமும் மாறி மாறி காணப்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் சற்ற பிரயத்தனம்பட வேண்டியதிருக்கும். சில நேரம் மனக் குழப்பமும் சந்தேகமும் உண்டாகும். அதற்கு 7-ல் சனி வக்ரகதியில் நின்று ராசியைப் பார்ப்பதும் ஒரு காரணம். கொடுக்கல்- வாங்க-ல் மிகுந்த கவனம் தேவைப்படும். 9-க்குடைய செவ்வாய் 2-ல் நின்று 9-ஆமிடத்தையே பார்ப்பதால் பூமி சம்பந்தமான சில நன்மைகள் ஏற்படும். சகோதர- சகோதரிவகையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் தென்படும். 10-க்குடைய சுக்கிரன் 11-ல் இருப்பதால் உத்தியோகம் மற்றும் தொழில்துறையில் அனுகூலங்கள் உண்டாகும். வேலைதேடி அலைந்தவர்களுக்கு தற்கா-க வேலையும் கிடைக்கும். 4-க்குடைய செவ்வாய் 2-ல் தன ஸ்தானத்தில் இருப்பதால் வீடு, மனை வாங்கும் அமைப்பு உருவாகும். புதிய வீடு கிரகப் பிரவேசம் செய்யும் யோகமும் அமையும். 5-க்குடைய குரு 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமணமாகி நீண்டநாட்களாக வாரிசு இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும். ஞாயிற்றுக்கிழமை செம்பருத்தி பூமாலை சாற்றி விநாயகரை வழிபட உத்தமம்.

கன்னி

கன்னி ராசியில் 3, 8-க் குடைய செவ்வாய் சஞ்சாரம். "கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. அவர் 8-ஆமிடத்தையும் பார்ப்பதால் கவலை, குழப்பம், சங்கடம், அபகீர்த்தி போன்றவை ஏற்படலாம். என்னதான் நல்லது நினைத்து அடுத்தவருக்கு சொல்லும் யோசனைகள் பொல்லாப்பில் முடியும். கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் திடீர் வைத்தியச்செலவுகள் உண்டாகும். 10-ல் குரு நின்று 2-ஆமிடத்தைப் பார்த்தாலும் 6-ஆமிடத் தைப் பார்ப்பதால் வரவும் உண்டு; செலவும் உண்டு; கடனும் உண்டு. 6-ல் சனி வக்ரகதியில் நின்று 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். உடன்பிறந்தவர்களோடு கூடுமானவரை விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வது உத்தமம். 7-ஆமிடத்தை செவ்வாய் பார்ப்பதால் கணவன் அல்லது மனைவி வழியில் விரயங்களைத் தடுக்க முடியாது. 9-க்குடைய சுக்கிரன் 10-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் மேற்கூறிய பலன்களுக்கு மருந்துபோடும் வகையில் சில நன்மைகளைத் தரும். ஆபரணச் சேர்க்கைத் தவணைத் திட்டத்திலும் பங்கு பெறுவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 12-ல் ஆட்சிபெறுவார். வீடு மாற்றம் பற்றிய எண்ணங்கள் உருவாகும். வெளியூர் வேலை சம்பந்தப்பட்ட பலனும் கைகொடுக்கும். புதன்கிழமையன்று ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் சஞ்சாரம். குருவுடன் சேர்க்கை. 9-க்குடைய புதன் 10-ல் மாறுவதும் தர்மகர்மாதிபதி யோகத்தையும் தரும். எனவே வாழ்க்கை, தொழில் இவற்றில் நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த காரியங்களும் நிறைவேறும். உத்தியோகத்திலும் ஒரு முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்துறையினருக்கு இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் ஆலோசனையை மேலதிகாரிகள் ஏற்றுக்கொண்டு மதிப்பும் மரியாதையும் தருவர். 3-ஆமிடத்தை குருவும் ராசிநாதன் சுக்கிரனும் பார்ப்பதால் தைரியம் மற்றும் தன்னம்பிக்கைகள் அதிகமாகும். 12-க்குடைய புதன் 10-ல் இருப்பதால் வெளியூர் அல்லது வெளிமாநில வேலைக்குச் செல்லும் முயற்சிகள் வெற்றியடையும். 2-க்குடைய செவ்வாய் 12-ல் இருப்பதால் விரயங்கள் ஏற்படத்தான் செய்யும். 6-ஆமிடத்தையும் அவர் பார்ப்பதால் கடன் உண்டா கும். என்றாலும் குரு ராசியைப் பார்ப்பதால் மதிப்பு காப்பாற்றப்படும். பூமி மனை சம்பந்தமாக விற்பனை செய்யும் முயற்சிகள் பலன் தரும். விரயத்தின்மூலம் தனவரவை எதிர்பார்க்கலாம். 7-க்குடையவர் 12-ல் இருப்பதால் கணவன் அல்லது மனைவிவழியில் விரயச்செலவுகள் ஏற்பட இடமுண்டு. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு சிறப்பு. 

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடைய குரு 8-ல் மறைவு. என்றாலும் 2-ஆமிடமான குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஏதோ ஒருவகையில் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அதேசமயம் உங்களது எண்ணமும் திட்டமும் செயல்வடிவம் பெறுவதில் தாமதம் குறுக்கீடு இவற்றை சந்திக்க நேரும். ராசிநாதன் 11-ல் சஞ்சாரம். அது ஒருவகையில் ஆறுதலையும் தேறுதலையும் தரும். அதேசமயம் உங்கள் முயற்சிகளிலும் பகீரதப் பிரயத்தனம் தேவைப்படும். பகீரதன் என்ற மன்னன் கடும் தவம், முயற்சிசெய்து கங்கையை பூமிக்கு வரவழைத்ததாக புராணம் சொல்லப்படுகிறது. அதனால் கங்கைக்கு "பாகீரதி' என்ற ஒரு பெயரும் உண்டு. அம்மாதிரி முயற்சிக்கு 11-ஆமிடத்துச் செவ்வாய் வெற்றியைத் தரும். மாத பிற்பாதியில் 10-க்குடைய சூரியன் 10-ல் ஆட்சி பெறுகிறார். அக்காலம் உத்தியோகம் தொழி-ல் தேவைகள் நிறைவேறும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். 4-ல் உள்ள சனி தேக ஆரோக்கியத்தில் சில சங்கடத்தைத் தந்தாலும் குரு பார்ப்பதால் பாதிப்புக்கு இடமில்லை. புத்திரகாரகன் 8-ல் மறைவது பிள்ளைகள் பற்றிய மனகவலையை அதிகரிக்கும். கணவன்- மனைவிக்கும் கருத்து வேறுபாடு களைத் தவிர்க்க இயலாது. முருகப் பெருமானை வழிபடவும். வேலுக்கு பாலாபிகம் செய்யவும்.

தனுசு 

தனுசு ராசிக்கு 3-ல் சனி ஆட்சி, வக்ரம். 3-ஆமிடம் தைரியம் சகாய  சகோதர ஸ்தானம். அங்கு சனி வக்ரமாக இருப்பதால் சகோதர- சகோதரிவகையில் மனக்கிலேசம் வருத்தம் போன்றவை ஏற்படலாம். எந்தவொரு பிரச்சினையிலும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொள்வதால் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியுமே தவிர அடுத்தவரின் பேச்சை முழுமையாக நம்பாமல் இருப்பதே நல்லது. குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாது. நினைத்தது நிறைவேறும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்து செயல்படுவது சிறந்தது. சனியைப் பார்க்கும் குரு எதிர்பாராத திருப்பத்தையும் தருவார். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். 12-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பதாலும், 10-க்குடைய புதன் 8-ல் மறைவதாலும் (கடக புதன்) தொழில்துறையில் சில முதலீட்டு விரயங்களைச் சந்திக்க நேரும். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு விரயத்தை ஈடுசெய்யும் முன்னேற்றத்தையும் தருவார். மாத பிற்பாதியில் சூரியன் 9-ல் ஆட்சி. தகப்பனார் மற்றும் பூர்வீக வழியில் ஆதாயம் உண்டாகும். கேது இருப்பதால் சற்று கவனமும் அவசியம். வியாழக்கிழமை நவகிரக குருபகவான் வழிபட சங்கடம் தீரும்.

மகரம்

மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. அதில் பாதச்சனி நடைபெறுகிறது. 2-ல் வக்ரகதியிலும் சஞ்சாரம். குடும்பத்தில் குழப்பம், நிம்மதிக்குறைவு, வாக்குவாதம் ஆகியவை ஏற்படலாம். நினைத்த காரியத்தையும் நிறைவேற்றுவது சற்று கடினமான காரியமாகும். குரு 12-ஆமிடத்தையும் பார்க்கிறார், 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். வரவு வந்தாலும் செலவு வரவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால் சமாளிக்க முடியாத நிலைகளும் உண்டாகும். இந்த ஏழரைச்சனி காலத்தில் ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் போன்றவற்றுக்கும் இடமுண்டு; மிகுந்த கவனம் தேவை. 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உத்தியோகத்தில் உயர்வைத் தரும். உங்கள் கருத்துக்கு மதிப்பு உண்டாகும். தொழில்துறையினரை "கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'' என்ற கதையாக ஆர்டர் வந்தால் சிப்பந்திகள் பிரச்சினை சிப்பந்திகள் வந்தால் ஆர்டர் பிரச்சினைகளையும் சந்திக்க நேரும். 3-க்குடையவர் 6-ல் மறைவதால் தைரியம் தன்னம்பிக்கை இவற்றில் குறைபாடுகள் உண்டாகும். சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும். திங்கட்கிழமை சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவும். 

கும்பம்

ஜென்ம ராசிநாதன் சனி வக்ரகதியில் ஆட்சியாக இருக்கிறார். எனவே தேக ஆரோக்கியத்தில் மருத்துவச் செலவு, வீண் விரயம் போன்றவை ஏற்படலாம். மேலும் ராகுவும் ஜென்ம ராசியில் சஞ்சாரம். சனி ராசியில் நின்று 3, 7, 10 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சகோதரவகையில் சங்கடம், கணவன் அல்லது மனைவி வழியில் அல்லது அவர்கள் உறவினர்களால் மனக்கவலை அலைச்சல், பொருளாதாரப் பற்றாக்குறை ஆகியவை ஏற்படலாம். ஒருசிலர் உத்தியோகத்தில் இடமாற்றம் குடியிருப்பு மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரும். 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில்துறையில் தனவரவுக்கு இடமிருந்தாலும் செலவுக்கும் வழியுண்டு. தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாகக் காணப்படும். உதவி ஒத்தாசைக்கு ஆள் இல்லாமல் திண்டாடக்கூடிய சங்கடம் நேரலாம். ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருப்பவர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். 5-ல் உள்ள குரு எண்ணங்களையும் திட்டங்களையும் செயல் வடிவமாக்குவதோடு, கணவன்வழி சொத்து சுகங்களையும் தருவார். ராசியைக் குரு பார்ப்பதால் எதிலும் சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் செயல்படமுடியும். தகப்பனா ரால்  சில நன்மையையும் அனுகூலத்தையும் பெறலாம். சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 4-ல் நின்று 12-ஆமிடத்தைப் பார்க்கிறார்; 10-ஆமிடத்தையும் பார்க்கிறார். தொழில் சம்பந்தமான செலவுகள் அதிகமாகக் காணப்படும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர அத்தியாவசியப் பொருட்களும் வாங்கும் அமைப்பு உண்டாகும். தொழில் துறையினருக்கு கடனுதவியும் கிடைக்கும். 2-க்குடைய செவ்வாய் 7-ல் சஞ்சாரம். கணவன் அல்லது மனைவிக்கு திடீர் வைத்தியச் செலவுகளும் ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். வெளியூர் அல்லது வெளிமாநில வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நற்பலன் தரும். பொங்கு சனியாக நடப்பவர்களுக்கு நன்மைகளைத் தரும். மரணச்சனி நடப்பவர்களுக்கு அதாவது மூன்றாவது சுற்று நடப்பவர்களுக்கு மரணத்திற்கு சமமான சங்கடங்களைத் தரும். 9-க்குடைய செவ்வாய், 7-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் தெய்வ கைகங்காரியங்களில் ஈடுபட வைக்கும். ஆன்மிகத்தில் புதிய பொருப்புகளும் வந்துசேரும். தகப்பனாரால் ஏற்பட்ட நற்பெயரைக் காப்பாற்றும்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 12-ஆமிடத்து ராகு அலைச்சல். இடமாற்றம் போன்றவற்றைத் தந்தாலும் அது பயனுள்ளதாகவும் அமையும். மாத பிற்பாதியில் வாகனத்தில் ஏற்பட்ட செலவுகள் குறையும். மனைவிவழியில் நிலவிய செலவினங்களும் குறையும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபாடு செய்யவும். 

செல்: 99440 02365